Home » , , , , » கிளிநொச்சியின் நீர்வரி இடாப்பு புதுப்பிக்கப்படவேண்டும் – மு.சந்திரகுமார் எம்.பி

கிளிநொச்சியின் நீர்வரி இடாப்பு புதுப்பிக்கப்படவேண்டும் – மு.சந்திரகுமார் எம்.பி

Written By Namnilam on Saturday, March 1, 2014 | 5:07 PM

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக, மிக நீண்ட காலத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட நீர் வரி இடாப்பு புதுப்பிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், பாராளமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நேற்று (28-02-2014) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் நீர் வரி இடாப்பினை புதுப்பிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.மாவட்ட விவசாயிகளும் இதனை வலியுறுத்தி வருகின்றனர். எனவே, நீர் வரி இடாப்பு புதுப்பித்தல் தொடர்பில் உள்ள நடைமுறை பிரச்சினைகளை கலந்தாலோசித்து, அதற்கான தீர்வுகளை கண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.


மேலும், நீண்டகாலமாக கிளிநொச்சியில் நெற்செய்கை காணி பிணக்குகளும் காணப்பட்டு வருகிறது. சிறுபோக காலங்களில் நீர்பங்கு பிணக்குகள் உர மாணியத்தை சீராக வழங்க முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நீர் வரி இடாப்பினை புதுப்பித்தல் ஊடாக தீர்வுகளை கண்டு, சீரான ஒரு ஒழுங்குபடுத்தலின் கீழ் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதோடு, நீர் வரி இடாப்பில் புதிதாக சேர்த்துக்கொள்ள வேண்டிய பிரதேசங்களையும் சேர்த்துக்கொள்ள முடியும் எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,


கிளிநொச்சியில் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் கழிவு வாய்க்கால்கள், குளங்களின் காணிகள் என வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் நிலங்களை அத்துமீறி பிடிப்பவர்கள் உண்மையிலேயே இந்த மாவட்டத்தில் ஒரு துண்டு காணி அற்றவர்கள் அல்ல மாறாக வசதி படைத்த, பல இடங்களில் காணிகள் வைத்திருக்கின்றவர்களே இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை அத்துமீறி பிடித்து வருகின்றனர்.


குறிப்பாக கிளிநொச்சி குளத்தின் பின் பகுதி இவ்வாறு அத்து மீறி பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் வெள்ளபெருக்கு, சீரான கழிவு நீர் அகற்றல், குளம் புனரமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். எனவே, இதில் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


அத்தோடு நேற்றைய இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டது.


* நீர் வரி இடாப்பினை புதுப்பித்தலுக்காக காணிகளின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகளை மேற்கொள்வதற்காக பத்திரிகை மூலம் பொது அறிவித்தல் விடுதல்.


* கமநல சேவை நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் படிவங்களை பூர்த்திசெய்து கையளித்தல்.


* பின்னர் பொறுப்பேற்கப்பட்ட விண்ணப்ப படிவங்களுக்கு அமைவாக பிணக்குகள் அற்ற காணிகளை முதலில் நில அளவை செய்யப்பட்டு புதிய பதிவுகளுக்கு உட்படுத்துதல்.


* பிணக்குகள் உள்ள காணிகள் தொடர்பில் பிரதேச செயலாளர் மட்டத்தில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படுதல்.


* மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக மாவட்ட செயலக பிரதிநிதி, கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர், பெரும்பாக உத்தியோகஸ்தர்கள், பிரதேச கமக்கார அமைப்பு தலைவர், நீர்பாசனத் திணைக்கள உத்தியோகஸ்தர், கமநல சேவைகள் நிலைய அலுவலர், காணி அலுவலர், அந்தந்த பிரதேசங்களிலுள்ள மூத்த விவசாயி ஒருவர் ஆகியோரை உள்ளடக்கிய உப குழுஒன்றை அமைத்தல்.


* இதன் பின்னர் நீர் பங்கு, உரமானிய விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளை புதிய பதிவுக்கு அமைவாக மேற்கொள்ளல்.


போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட 06, 07ம் வாய்க்கால், பெரிய பரந்தன் பிரதேசங்களில் வரும் மார்ச் மாதம் 07ம் தேதி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.


இக்கூட்டதில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்,மேலதிக அரச அதிபர் சீர்ணிவாசன்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலாளர் முகுந்தன், கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திரா,


கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளர் சுதாகரன், அதன் பொறியிலாளர் விகிர்தன், கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன், நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர், மாவட்டச்செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் கௌரிதாசன், காணி உத்தியோகஸ்தர்கள், பெரும்பாக உத்தியோகஸ்தர்கள், கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


5338 5339 5340

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger