Home » » திருடுபோன கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியவர்கள் பயங்கரவாதிகள் அல்ல

திருடுபோன கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியவர்கள் பயங்கரவாதிகள் அல்ல

Written By Namnilam on Wednesday, March 12, 2014 | 7:26 AM

காணாமல்போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருடுபோன கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்திருந்த இரண்டு நபர்கள் பற்றிய விவரங்களை சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், வெளியிட்டுள்ளனது. இவர்கள் இருவருமே இரானியப் பிரஜைகள் என்று அது தெரிவித்துள்ளது.


இவர்கள் இருவருமே செல்லுபடியாகக்கூடிய இரானிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், பின்னர் அங்கிருந்து பெய்ஜிங் கிளம்பிய அந்த விமானத்தில் திருடப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஏறியிருந்தார்கள் என்றும் திரட்டப்பட்டுள்ள தரவுகள் காட்டுவதாக இண்டர்போல் கூறுகிறது.


விமானம் காணாமல்போனது ஒரு பயங்கரவாத சம்பவத்தினால் என்ற வாய்ப்பைக் குறைப்பதாக இந்த விவரங்கள் அமைந்திருக்கின்றன என்று இண்டர்போலின் பொதுச் செயலர் ரொனால்ட் நோபுல் கூறினார்.

மலேசிய பொலிஸ்


தகவல் கடவுச்சீட்டைக் கொண்டு பயணித்திருந்த இரண்டு பேரில் ஒருவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என மலேசிய பொலிசார் கூறுகின்றனர்.


19 வயது இரானிய இளைஞரான இந்நபர் ஜெர்மனிக்குள் குடியேற முயன்றிருந்த ஒருவராக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெர்மனியில் வாழும் தனது தாயைச் சென்றடைவதற்காக இந்த இளைஞன் ஜெர்மனிக்கு செல்ல முற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.


திருடுபோன பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த விமானத்தில் பயணித்திருந்த இரண்டாவது நபர் பற்றி விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக இந்த விமானம் காணாமல்போயிருக்ககூடிய வாய்ப்பை குறைப்பதாக மலேசியா தற்போது தந்துள்ள தகவல் அமைந்துள்ளது என பெய்ஜிங்கில்  செய்தியாளர் கூறுகிறார்.


தேடுதல் பணி


இதனிடையே விமானம் தேடப்பட்டுவருகின்ற இடத்தின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தென் கீச கடலில் ஆரம்பித்து மேற்கில் மலாய் தீபகற்பத்திலுள்ள மலாக்கா நீரிணைப் பகுதி வரைக்குமாக தேடுதல் பணி நடந்துவருகின்றது.


கடல் பரப்பில் மட்டுமல்லாது நிலப்பரப்பிலும் மலேசிய அதிகாரிகள் தேடிவருகின்றனர். இந்த விமானம் கிளம்பி ஒரு மணி நேரத்திற்குள்ளாக தனது திட்டமிட்ட பாதையிலிருந்து கிளம்பிய இடத்திற்கே திரும்பிவர முயற்சித்திருந்ததோ என்பதற்கான வாய்ப்பையும் தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆராய்ந்துவருகின்றனர். விமானம் காணாமல்போய் கிட்டத்தட்ட நான்கு நாட்களாகிவிட்ட நிலையில், விமான எச்சங்களை தேடும் பணியில் தற்போது ஒன்பது நாடுகள் பங்கெடுத்துள்ளன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger