வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம், புலிப் பயங்கரவாதம் என்ற நாடகத்தை நடிக்க ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அப்பாவி தமிழ் மக்கள் மீது அரசாங்கம் புலி முத்திரை குத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய நடத்தப்பட உள்ள சர்வதேச விசாரணைகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இலங்கையில் தற்போது எந்த பயங்கரவாதமும் இல்லை. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது.
விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை முற்றாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தது. எனினும் மீண்டும் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையை வெளியிட்டு அரசாங்கம் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள சிரமமான நிலையில் இருந்து தப்பிக்க, மக்களை அச்சுறுத்தி சர்வதேசத்திற்கு முன்னால் பொய்யான நாடகத்தை ஆடி வருகிறது. அப்பாவி தமிழ் மக்கள் மீது புலி முத்திரை குத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும்.
போர் முடிந்து 5 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், பயங்கரவாத அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவர்களை சிறையில் அடைப்பது எந்த வகையில் நியாயமாகும். அரசாங்கத்தின் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால், காணப்படும் பிரச்சினைகள் அதிகரிக்குமே அன்றி குறையாது.
சர்வதேச பொலிஸார் தேடி வரும் விடுதலைப் புலிகள் தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி, நாட்டில் விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து வருகின்றனர் என காண்பிக்க முயல்வது நியாயமற்றது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment