Home » » மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

மதுராந்தகம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

Written By Namnilam on Monday, May 5, 2014 | 5:47 PM

செஞ்சியைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் பாஸ்கர். விஜயா கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது 1½ வயது ஆண் குழந்தை அரசு. இன்று அதிகாலை பாஸ்கர் மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் கார்த்திக் பாலாஜி, மகேஸ்வரன், கிருஷ்ணன் ஆகிய 6 பேர் காரில் சென்னையை நோக்கி வந்தனர்.


அதிகாலை 5.30 மணி அளவில் மதுராந்தகம் பை பாஸ் சாலையில் வந்தபோது முன்னால் சென்ற ஆம்னி பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் கார் நிலை தடுமாறி பஸ்சின் பின்பகுதியில் மோதியது.


அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி காரை இடித்து தள்ளியது. இதில் கார் பஸ்சின் பின் பக்கத்தில் உள்ளே புகுந்து நொறுங்கியது. இடி பாடுகளில் சிக்கி டாக்டர் பாஸ்கர், அவரது மனைவி பாக்கியலட்சுமி, குழந்தை அரசு உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.


விபத்து நடந்ததும் லாரி டிரைவரும், ஆம்னி பஸ் டிரைவரும் வண்டிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். பஸ்சின் பின்பகுதியில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


பஸ்சின் பின் பகுதியில் கார் சிக்கி இருந்ததாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வெல்டிங் எந்திரம் மூலம் காரை துண்டு துண்டாக வெட்டி 6 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்தால் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பஸ் டிரைவர் ஓட்டம் பிடித்ததால் அதில் இருந்த பயணிகள் தவித்தனர். பின்னர் வேறு பஸ்களில் அவர்கள் ஏறிச் சென்றனர்.


டாக்டர் பாஸ்கர் குடும்பத்துடன் தாம்பரத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு வந்தார். வழியில் விபத்தில் சிக்கி குடும்பத்துடன் பலியாகி விட்டார். விபத்து பற்றி தெரிந்ததும் உறவினர்கள் கதறி அழுதபடி மதுராந்தகம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியானவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மதுராந்தகத்தை அடுத்த படாளம் கூட்டுரோட்டில் நேற்று நடந்த விபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவாமிநாதன் உள்பட 3 பேர் பலியானார்கள்.தற்போது 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் விபத்துக்களை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger