Home » , » பிரதமரானவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பார் மோடி

பிரதமரானவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பார் மோடி

Written By Namnilam on Sunday, May 25, 2014 | 11:38 AM

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி, தமது பதவியேற்பு சமயத்தில் அல்லது பதவியேற்பு முடிந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கக்கூடும் என புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. பதவியேற்பு விழாவுக்கு 'சார்க்' நாடுகளின் தலைவர் என்ற முறையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். அவ்வாறு அழைப்பு அனுப்பப்பட்டமைக்கு எதிராகத் தமிழகத்தில் பெரும் உணர்வலைகள் கிளர்ந்திருக்கின்றன.


நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்கும் சமயத்தில் அல்லது பதவியேற்ற கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் புதுடில்லிக்கு அழைத்து, அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கும் இராஜதந்திர ரீதியிலான கௌரவத்தை வழங்கினால் அது, தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகளை சமாளிப்பதாக அமையும் என, மோடியின் ஆலோசகர்கள் கருதுகின்றார்களாம்! பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படும் சமயம் ம.தி.மு.க. செயலாளர் நாயகம் வைகோ அவரைச் சந்தித்து வாழ்த்தியிருந்தார். ஆனால் மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைக்கப்படுகின்றார் என்ற செய்தி வெளியானதும் அந்த அழைப்புக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக வைகோ மீண்டும் புதுடில்லி சென்று நரேந்திர மோடியை இரண்டாவது தடவையும் சந்தித்தார்.


மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு அனுப்பியமையால் கிளர்ந்துள்ள உணர்வலைகளைச் சமாளிப்பதற்காக ஏதேனும் மாற்று நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும்படி வைகோ இந்தச் சந்திப்பின்போது நரேந்திர மோடியை வற்புறுத்தினார் எனத் தெரிகின்றது. அத்தகைய மாற்று நடவடிக்கையில் ஒன்றே பதவியேற்ற கையோடு தமிழ்க் கூட்டமைப்பினரைப் பிரதமர் மோடி சந்திப்பதாகும் என்று புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் ஊகம் கூறுகின்றன.


பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து தமிழ்க் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் அவரை இயன்ற விரைவில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கோரும் வாசகம் கடைசியாக இடம்பெற்றுள்ளது. அது, புதுடில்லியிலிருந்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக இருக்கக்கூடும் எனவும் ஊகிக்கப்படுகின்றது. இந்தக் கடிதம் இன்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.


அதனை அடுத்து அக்கடிதத்தில் தமிழ்க்கூட்டமைப்பினர் கோரியிருக்கின்றபடி, பிரதமராகப் பதவியேற்கும் மோடியை அந்தக் கையோடே தமிழ்க் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோடியை, மீண்டும் இரண்டாவது தடவையாக வைகோ புதுடில்லியில் சந்தித்து இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு அனுப்பப்பட்டமை குறித்து ஆட்சேபம் தெரிவித்த சமயத்தில் அந்தச் சந்திப்பின்போது அருண் ஜெட்லியும் உடனிருந்தார்.


பிரதமராகப் பதவியேற்கப் போகும் நரேந்திரமோடி, அச்சமயத்தில் எதிர்கொள்ளும் வெளிவிவகாரப் பிரச்சினை இலங்கை ஜனாதிபதிக்கான அழைப்பு எனச் சுட்டிக்காட்டிய புதுடில்லி வட்டாரங்கள், அந்தச் சந்திப்பின்போது அருண் ஜெட்லியை, பிரதமராகப் பதவியேற்கப் போகும் நரேந்திரமோடி தம்முடன் அருகில் வைத்திருந்தமை அடுத்தே வெளிவிவகார அமைச்சர் அருண் ஜெட்லியே என்பதைக் கோடிகாட்டுவதாகவும் தெரிவித்தன. புதுடில்லிக்கு அழைக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கும் அருண் ஜெட்லியையும் சந்தித்து விரிவான பேச்சுக்களில் ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு, வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் புதுடில்லியிலிருந்து அழைப்புக் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger