அத்தினாபுரத்து அரண்மனையில் நடைபெற்ற சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்று, அவமானத்துடன் தலைகுனிந்து செயலற்று நிற்க, அவர்கள் முன்னிலையில் துச்சாதனனால் திரௌபதி துகிலுரியப்பட்டாள். அவளது மானத்தைக் காப்பாற்ற, அங்கே கண்ணனின் கருணை இருந்தது.இன்று, சிங்களக் கயவர்களிடம் தனது கணவனைத் தெரிந்தே தொலைத்துவிட்டு, நீதிக்காகப் போராடும் அனந்தி சசிதரன் சுமந்திரனால் அவமானப்படுத்தப்பட்ட போது, அவரை அங்கே எந்தக் கண்ணனும் காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனாலும், ஒருவேளை கண்ணகிபோல் அனந்தியும் சபதம் ஏற்றிருந்தால், அந்த துச்சாதனனுக்கு நேர்ந்த கதி நிச்சயம் சுமந்திரனுக்கும் ஏற்படக் கூடும். ஆகையால், அனந்தி அமைதி கொள்ள வேண்டும் என்பதே எமது தற்போதைய வேண்டுதலாக உள்ளது.
2009 மே 18 இற்குப் பின்னரான ஐந்து வருட காலத்தில் ஈழத் தமிழர்கள் அடைந்துவரும் மிக மோசமான அரசியல், சமூக, பொருளாதார தோல்விகளுக்கு தமிழர்களது தலைவிதி மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கற்ற, குழப்பகரமான அரசியல் நிலைப்பாடும் காரணமாக இருந்துள்ளது என்பதை யாரும் நிராகரிக்க முடியாது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக வேறொரு அரசியல் சக்தியோ, சம்பந்தருக்குப் பதிலாக வேறொரு அரசியல் தலைவரோ இருந்திருந்தாலும் இந்த அளவு மோசமான நிலையைத் தமிழினம் எதிர்கொண்டிருக்காது.
எதிராக நடப்பது என்பது மட்டுமல்ல, எதிரியோடு இணங்கி நடப்பதும் துரோகமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக அதையேதான் சாதித்து வருகின்றது.தானாகவும் எந்த முடிவையும் எடுப்பதில்லை. தமிழ் மக்களைச் சார்ந்தும் எந்தச் சரியான முடிவையும் எடுப்பதில்லை. நாமாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குச் செல்லவில்லை என்பதைத் தவிர வேறு எந்தச் சரியான முடிவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்ததாகத் தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ மக்களுக்குப் பலமான ஒரு அரணாக மாறி இருக்க வேண்டும். உலகத் தமிழர்கள் மத்தியிலும், சர்வதேச அரங்கிலும் தமக்குச் சார்பான பலத் திரளை உருவாக்கியிருக்க வேண்டும். தமிழீழ மக்களது புலம்பெயர் சக்தியினை ஒன்று திரட்டி, தனக்கான கவசத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.தமிழகத்தின் தமிழ்த் தேசியப் பேரெழுச்சியை தமிழீழ மக்களுக்கான பலமாக மாற்றியிருக்க வேண்டும். சிங்கள தேசத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நேச சக்திகளை அரவணைத்திருக்க வேண்டும். நீதிக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளை நெருங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அத்தனை சந்தர்ப்பங்களையும் தெரிந்தே தொலைத்துவிட்டு, சிங்களத்தின் கருணைக்காகத் தவம் இயற்றுகின்றது. உண்ட சோற்றுக்காகக் கர்ணன் செய்த அதே தவறினை சம்பந்தர் செய்து வருகின்றார். அவருக்கு, துரையோதனன்களும், துச்சாதனன்களும் துணையாக வலம் வருகின்றார்கள்.
அனந்தி சசிதரன் கட்சித் தலைமையின் அனுமதி இன்றி ஜெனிவா சென்றதும், அங்கே சிங்கள அரசின் இன அழிப்பினை அம்பலப்படுத்தியதும் சம்பந்தருக்கு அனந்திமீது பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருந்தது. திருமலையில் புதன்கிழமை (30-04-2014) நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்திலும் அது பிரதிபலித்தது. கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவேண்டிய கட்டாயம் அனந்தி சசிதரனுக்கு உருவாகியதால், அவர், மதிய உணவு வேளையின்போது தன்னால் தயாரிக்கப்பட்ட அறிக்கை மூலம், சம்பந்தரது குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்க முற்பட்டார். அதன்போது, குறுக்கிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவுப் பிரதிரிதியான சுமந்திரன் மக்கள் பிரதிநிதியாக, 87,870 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவான அனந்தியை தரக்குறைவாக துச்சாதன முறையில் விமர்சித்தார்.
‘ஜெனிவா விவகாரம் உங்களிற்கு அரசியலாக இருக்கலாம். எனக்கோ அதுவே வாழ்க்கைப்பிரச்சினை. காணாமல் போன எனது கணவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுடனேயே அங்கு போனேன்’ என்று கண்ணீருடன் பதிலளித்துவிட்டு, திரௌபதி போலவே அமைதியானார். அது ஒரு புயலுக்கு முந்திய அமைதி போலவே அனைவராலும் உணரப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்கதவு உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், அதன் தலைவர் சம்பந்தரையும் தவறாகவே வழிநடாத்துகின்றார் என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாகவே தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. கொழும்பைத் தளமாகக் கொண்டு வழக்கறிஞர் தொழிலைச் செய்துவரும் சுமந்திரன் சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிநாட்டவர்களுக்கான முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஒன்றிலும் முக்கிய பதவி வகிக்கின்றார். அந்நிய முதலீடுகளை சிறிலங்காவிற்குள் கொண்டுவருவதற்கான பணியினை மேற்கொள்ளும் இந்த நிறுவனத்தின் ஊடாகவே புலம்பெயர் தமிழர் நிறுவனங்கள் சிலவும் சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், சுமந்திரனது செயற்பாடுகள் நிச்சயம் தமிழ் மக்களுக்குச் சார்பானதாக அமையப் போவதில்லை.
இது தொடரும் பட்சத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஒன்றிணைந்து, தமிழீழ மக்களுக்கேயான புதிய அரசியல் சக்தி ஒன்றினை உருவாக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் புலமும், தமிழகமும் அதற்காகப் பாடுபட வேண்டும்.
Post a Comment