Home » » கோச்சடையான் - விமர்சனம்

கோச்சடையான் - விமர்சனம்

Written By Namnilam on Sunday, May 25, 2014 | 12:24 PM

நடிகர் : ரஜினிகாந்த்
நடிகை : தீபிகா படுகோனே
இயக்குனர் : சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஓளிப்பதிவு : ராஜீவ் மேனன்


தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை.


கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் சிவபக்தர். சிறந்த வீரரும்கூட. அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார்.


இந்நிலையில் ஒருநாள் கோச்சடையான், தனது போர் வீரர்களை அழைத்துக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்று போருக்கு தேவையான குதிரைகளை வாங்கி கப்பலில் கொண்டு வருகிறார்.


அப்போது கோட்டையபட்டினத்தின் எதிரி நாடான கலிங்கபுரியை ஆட்சி புரியும் ஜாக்கி ஷெராப்பின் படை வீரர்கள் மறைந்திருந்து கோச்சடையான் கப்பல்கள் மீது பாய்ந்து சண்டையிடுகிறார்கள். அப்போது நடக்கும் சண்டையில் அனைவரையும் விரட்டியடிக்கிறார் கோச்சடையான்.


கலிங்கபுரி வீரர்கள் தப்பித்து செல்லும் செல்லும்போது கோச்சடையானின் கப்பல்களில் இருக்கும் உணவுகளில் விஷத்தை கலந்துவிட்டு செல்கிறார்கள். அதை உண்ணும் கோச்சடையானின் வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்.


இவர்களை காப்பாற்றுவதற்காக கோச்சடையான் அருகிலிருக்கும் கலிங்கபுரிக்கு சென்று அரசர் ஜாக்கி ஷெராப்பை சந்தித்து, தன் போர் வீரர்களை காப்பாற்றும்படி கேட்கிறார். அதற்கு, ஜாக்கி ஷெராப் அவர்களை காப்பாற்றுவதென்றால், நீ கொண்டு வந்த வீரர்களையும், குதிரைகளையும் என்னிடமே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறுகிறார்.


அதற்கு கோச்சடையானும் சம்மதித்து அவரிடமே அனைத்தையும் விட்டுவிட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். இருப்பினும், எப்படியாவது தனது வீரர்களை தன்னுடைய நாட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வேன் என்று ஜாக்கி ஷெராப்பிடம் சூளுரைத்துவிட்டு வருகிறார்.


ஆனால், கோட்டையபட்டின அரசர் நாசரோ கோச்சடையானை பழிவாங்க இதுதான் சரியான தருணம் என்று அவர்மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி அவரை கொல்ல உத்தரவிடுகிறார்.


இவை அனைத்தையும் அறியும் கோச்சடையானின் இளைய மகனான ராணா தனது அப்பாவின் கனவை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். அதன்படி, கலிங்கபுரிக்கு செல்கிறார். அங்குள்ள படையில் சேர்ந்து வீரதீர சாகசங்கள் செய்து மன்னன் மனதில் இடம் பிடிக்கிறார். அந்நாட்டுக்கு படைத்தளதியாகவும் உயர்கிறார்.


கோட்டையபட்டினம் நாட்டு வீரர்கள் அங்கு அடிமைகளாக நடத்தப்படுவதை அறியும் ராணா, அவர்களை காப்பாற்றுவதற்காக ஜாக்கி ஷெராப்பின் மகனான ஆதியிடம், அடிமைகளாக இருக்கும் கோட்டையபட்டின வீரர்களை நம்முடைய படையில் சேர்த்து எதிரி நாடுகளிடம் போரிட்டால் அவர்களை எளிதில் வென்று நமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறான்.


Kochadaiyaan


ஆதியும் ராணாவின் சூழ்ச்சி தெரியாமல் இதற்கு சம்மதிக்கிறான். பிறகு அடிமைகளை தங்களது படையில் சேர்த்து, அவர்களை அழைத்து கொண்டு கோட்டையபட்டினம் மேல் படை எடுக்கிறான். ராணாவை கோட்டையபட்டின நாட்டின் இளவரசர் சரத்குமார் தலைமையில் படைகள் எதிர் கொள்கின்றன.


களத்தில் சண்டை போடுவதற்கு பதில் ராணாவும் சரத்குமாரும் கட்டிப் பிடிக்கின்றனர். இருவரும் சிறு வயது நண்பர்கள் என்கிறார்கள். இதற்கிடையில், ராணாவின் தங்கை ருக்மணியை சரத்குமார் விரும்புகிறார். சரத்குமாரின் தங்கை இளவரசி தீபிகா படுகோனேவுக்கும் ராணாவுக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மன்னர் நாசரை கோபப்பட வைக்கிறது.


ஒரு கட்டத்தில் முகமூடி அணிந்த ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து நாசரை கொல்ல முயற்சிக்கிறான். அவனை வீரர்கள் பிடித்து முகமூடியை கழற்றும்போது அது ராணா என்பதை கண்டு அதிர்கின்றனர். தந்தையை கொன்றதற்காக பழி வாங்க வந்ததாக ராணா சொல்கிறான். அவனை சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து ராணா தப்பிக்கிறான்.


இதற்கிடையே, தீபிகா படுகோனேவுக்கும் ஜாக்கி ஷெராப் மகன் ஆதிக்கும் அவசர அவசரமாக நாசர் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இறுதியில் தனது தந்தையை நயவஞ்சகத்துடன் கொன்ற நாசரை ராணா பழிவாங்கினாரா? தீபிகா படுகோனேவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.


மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் அபாரமாக வந்துள்ள அனிமேஷன் படம். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் தத்துவங்களாக அனல் கக்குகின்றன. போர்க்கள காட்சிகளில் கிராபிக்ஸ் மிரட்டலாக உள்ளது.


தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு நடிப்பிலும், அழகிலும் மெருகூட்டியிருக்கிறார்கள். சண்டைக்காட்சியிலும் மிரட்டியிருக்கிறார்.


சரத்குமார் சிறிது நேரம் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி ஆகியோர் வில்லத்தனத்தில் குரூரம் காட்டுகின்றனர். படத்துக்கு இன்னொரு பெரிய பலம் நாகேஷ். அவரை அப்படியே அனிமேஷனில் சிற்பியாக கொண்டு வந்து இருப்பது பலே...


அனிமேஷன் தொழில்நுட்பம் புது அனுபவம் என்பதால் சில நிமிடங்கள் படத்தோடு ஒன்ற சிரமம் ஏற்பட்டாலும் போக போக கதையின் வேகமும் கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதையும், வசனமும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் அதை மறக்கடிக்க செய்து விடுகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்துள்ள பாடல்களும், அதற்கேற்ற காட்சியமைப்புகளும் சபாஷ் போடவைக்கிறது.


ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது. காட்சிகளை தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்திய சவுந்தர்யாவுக்கு சபாஷ் போடலாம். தொடரும் என இரண்டாம் பாகம் எடுப்பது போல் படத்தை முடித்திருக்கிறார். தமிழ் சினிமாவை, ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட வைக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருப்பது சிறப்பு.


மொத்தத்தில் ‘கோச்சடையான்’ புதிய தொழில்நுட்ப அதிசயம்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger