பல்வேறு வழிகளில் மீளவும் பயங்கரவாதத்தை தலைதூக்க செய்ய முயற்சிக்கப்படுவதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது. அதனை வெவ்வேறு வழிகளில் மீளவும் தலைதூக்கச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
உள்நாட்டு பயங்கரவாதத்திற்கு பதிலாக வெளிநாட்டு பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்த சவால்களை புரிந்து கொண்டு அதற்கு எதிராக செயற்படக் கூடிய ஆற்றல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு காணப்படுகின்றது.
நாட்டில் பலவீனமான ஆட்சியிருந்திருந்தால் இப்போது இந்த நாடு நமக்கு சொந்தமாகியிருக்காது. நாட்டில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. எந்தவொரு ஆட்சியிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பிரச்சினைகளின் போது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து கோழைகளாக செயற்பட்டால், எதிர்கால சமூகம் நம்மை நிந்திக்கும். எல்லாக் காலங்களிலும் நாட்டை காட்டிக்கொடுக்கும் தரப்பினர் வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வாறானவர்கள் தற்போதும் இருக்கின்றார்கள்.
தற்போதைய வரலாறு எழுதப்படும் போது இவ்வாறான துரோகிகள் பற்றியும் எழுதப்படும். கடும்போக்குடையவர்கள் எதனைச் சொன்னாலும் தேர்தல்களின் போது மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றமை புலனாகின்றது என அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
கருவலபெத்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment