Home » » யாழ். பல்கலை நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு, TNA குற்றச்சாட்டு

யாழ். பல்கலை நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு, TNA குற்றச்சாட்டு

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 6:35 PM

யாழ் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுகின்றமை மற்றும் பேராசிரியர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னால் இராணுவத்தினருக்கு சம்பந்தம் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன. நேரடியாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.   அதற்கு மேலாக 16ஆம் திகதி முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும், விடுதிகளிலிருந்து மாணவர் வெளியேற வேண்டும் எனவும் பதிவாளர் அறிவித்தல் கொடுத்துள்ளார்.


ஆனால் பதிவாளர் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் அந்த அறிவித்தலைத் தான் விடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் என்றும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.   இத்துடன் யாழ். பல்கலைக்கழகத்  துணைவேந்தர், பீடாதிபதிகள், மாணவர் தலைவர்களை  யாழ். மாவட்ட இராணுவத் தளபதி இன்று (நேற்று)  சந்தித்து கலந்துரையாடியும் உள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை நோக்கும் போது  யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது.


பல்கலைக்கழகம் மூடப்படுவதையும் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விடுக்கபட்டுள்ள கொலை மிரட்டல் சம்பவத்தையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் துணைவேந்தர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.    இத்தகைய இராணுவத் தலையீடுகள், மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரை  அச்சுறுத்துவதாகவும் அமையும் எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger