Home » , » ஒர் ஆச்சரிய ஆளுமை அஞ்சலிதேவி

ஒர் ஆச்சரிய ஆளுமை அஞ்சலிதேவி

Written By Namnilam on Friday, July 18, 2014 | 3:22 PM

50 வயதை எட்டிய அத்தனை பேரிடமும் அஞ்சலிதேவி என்ற பெயரைச் சொன்னால் உற்சாகம் பொங்கி வழியும். அஞ்சலிதேவியின் தேனினும் இனிய குரலும் அவரது நளினம் நிறைந்த நடனமும், பாந்தம் குறையாத நடிப்பும் என்றைக்குமே மறக்க முடியாதவை. 

கடந்த ஆண்டு தனது 87 வயதில் காலமான அஞ்சலி தேவிக்கு இது முதலாண்டு நினைவு. அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்கு மகளாகப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி தெலுங்கு திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் சென்னை அவருக்குப் பிடித்துப் போனதால் 40களில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். 

'அன்று டி.ஆர்.மகாலிங்கம் மெல்ல புகழ்பெற்று வந்த காலம், கிட்டத்திட்ட வளரும் நாயகன்தான். ஆனால் அஞ்சலிதேவி அதற்கு முன்பே பிரபலமாகிவிட்டார். என்றாலும் ஆதித்தன் கனவு’ படத்தின் மூலம் டி.ஆர் மகாலிங்கம் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பிறகு தமிழ்ரசிகர்களும் அஞ்சலிதேவியின் நவரச நடிப்புப் பிரசன்னத்திற்கு காத்திருக்க ஆரம்பித்த பொற்காலம் தொடங்கியது. 

லவகுசா படத்தின் சீதா தேவியாக நடத்தபிறகு கருப்பு வெள்ளை காலத்தின் 'ஐகானாக'வும் மாறினார் அஞ்சலிதேவி. இவர் ஏற்று நடித்த வரலாற்றுக் கதாபாத்திரங்களில் 'சாவித்திரி'யும் சாகா வரம்பெற்றது. மூத்த தெலுங்கு ரசிகர்கள் பலரது வீடுகளில் இன்னும் இவரது படங்களை பாதுகாக்கும் அளவுக்கு தனது சொந்த மாநில ஆந்திரத்தில் மங்காப் புகழ்பெற்றிருக்கும் அஞ்சலிதேவி, தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்துவிட்ட காரணத்தாலோ என்னவோ, அவரை 1959இல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக்கி அழகு பார்த்தார்கள் தமிழர்கள். 

தமிழில் ரஜினியின் அம்மாவாக 'அன்னை ஓர் ஆலயம்' நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம். நடிப்போடு நின்றுவிடாமல் அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி 30 படங்களைத் தயாரித்திருக்கிறார். இன்னொரு ஆச்சர்யமும் இதுவரை வெளிவராத தகவலாகக் கிடைக்கிறது. சிவாஜி நாயகனாக அறிமுகமாக இருந்த 'பூங்கோதை' படத்தை அஞ்சலி தேவி தயாரித்தார். ஆனால், அந்தப் படத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட 'பராசக்தி' முதலில் வெளியாகிவிட்டது. 

சாய்பாபாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கும் அளவுக்கு அஞ்சலிதேவின் ஆன்மிகப் பக்கமும் அர்த்தம் பொதிந்தது. சாய்பாபாவின் தீவிர பக்தையான இவர், சென்னையிலுள்ள தன் வீட்டை சாய்பாபா அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். 1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். 

ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குநர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான 'கொல்லபாமா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாதான் அஞ்சனிதேவியின் பெயரைக் கொஞ்சம் மாற்றி அஞ்சலிதேவியாக ஆக்கினார். அந்த படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற அஞ்சலிதேவி இதுவரை 350 தெலுங்கு, தமிழ், கன்னட, இந்தி படங்களிலும் நடித்து சாதனைத் தடம் பதித்திருக்கும் அஞ்சலிதேவியை ஒரு ஆச்சரிய ஆளுமை என்றால் மிகையில்லை.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger