Home » » பாடம் கற்றுக்கொண்டதால் உருவான தொழில்நுட்பம்

பாடம் கற்றுக்கொண்டதால் உருவான தொழில்நுட்பம்

Written By Namnilam on Thursday, August 14, 2014 | 8:53 AM

புதிய இடங்களில் நாம் தேடிவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி அங்குள்ள யாரிடமாவது கேட்போம். சரியாக வழிகாட்டுவோர் உண்டு. எதையாவது சொல்லி நம்மை அலைக்கழிப்பவர்கள் உண்டு. 

தெரியாது என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டு வேகமாக நடையைக் கட்டுவோரும் உண்டு. இந்த வம்பே வேண்டாம் என்று புதிய இடத்தில் வழி கண்டுபிடிக்க ஸ்மார்ட்போன் காட்டும் வரைபடத்தைத் தற்போது பலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதைச் சாதித்திருப்பது செயற்கைக்கோள் மூலம் இடத்தைக் கண்டுபிடிக்க உதவும் அமெரிக்கத் தயாரிப்பான ஜி.பி.எஸ் (Global Positioning System) எனும் கருவியே. போர்க்காலங்களில் குண்டுகளையும் ஏவுகணைகளையும் ஒரு குறிப்பிட்ட இலக்கின் மீது வீசித் தாக்க இந்த ஜி.பி.எஸ் கருவி மிக அவசியம். 

ஆனால் அந்நிய நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கருவியை நம்பி நாம் போரில் இறங்குவது ஆபத்தானது. நெருக்கடியான நேரங்களில் அந்த நாடு ஜி.பி.எஸ். கருவியை செயற்படாமல் ஆக்கிவிட்டால் நம் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். இது கற்பனை அல்ல. 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் துருப்புக்கள் கார்கில் பகுதியில் ஊடுருவியபோது, அமெரிக்க அரசு நிர்வகிக்கும் நமது ஜி.பி.எஸ் கருவியின் புள்ளிவிவரங்களை இந்தியா கோரியது. 

ஆனால் அமெரிக்க அரசு அந்த விவரங்களைத் தர மறுத்துவிட்டது. இந்த கார்கில் அனுபவம் இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டது. இதனால் முழுவதும் சொந்தமான, உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி உருவாக்கப்படும் ஜி.பி.எஸ் கருவியை உருவாக்கியே தீரவேண்டிய அவசியத்தை இந்தியர்கள் உணர்ந்தனர். இதற்காகவே Indian Regional Navigation Satellite System (IRNSS) என்ற ஓர் அமைப்பை இந்திய விண்வெளி அமைப்பு உருவாக்கியிருக்கிறது. 

அது மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் கொண்டதோர் அமைப்பு. அவை ஏழுமே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அதே வேகத்துடன் (geosynchronous orbits) சுற்றும் ஜியோசின்க்ரனஸ் கோள்களாக இருக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த அமைப்பை முழுமையாக நிறுவிய பிறகு நெருக்கடியான நேரங்களில் அந்நிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டிய அவலநிலையிலிருந்து விடுபட்டு விடும் நாடாக தற்போது இந்தியா மாறிவிட்டது. 

தனது நாட்டின் எல்லைகளை மட்டுமல்ல, அவற்றைத் தாண்டி 1500 கி.மீ. வரை உள்ள பகுதிகளைக்கூட இந்தியா அதன் மூலம் கண்காணிப்பிற்கு உட்படுத்த முடியும். பல்வேறு கோணங்களிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்தை 'நோக்கும்' பணியை இந்த செயற்கைக் கோள்கள் செய்யும். அதன் முதல் செயற்கைக் கோளான IRNSS-1A 2003 ஜூலையில் அனுப்பி வைத்தது இந்தியா. இரண்டாவது செயற்கைக்கோள் IRNSS-1B 2014 ஏப்ரல் 4 அன்று அனுப்பப்பட்டது. 

2014 இல் மேலும் இரண்டு செயற்கைக் கோள்களான IRNSS-1C, IRNSS-1D செலுத்தப்பட உள்ளன. 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் மூன்று செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும் எனத் தெரிகிறது. இதுபற்றி இந்திய விண்வெளி ஆய்மைய(இஸ்ரோ) தலைவர் கே. ராதாகிருஷ்ணன் கூற்றுப்படி, IRNSS அமைப்பு 2016 தொடக்கத்தில் செயல்படத் தயாராகி விடும். இரண்டு விதமான சேவைகளை அது தர இருக்கிறது. 

20 மீற்றர் வரை கண்காணிக்கவல்ல பொதுமக்களுக்கான ஒரு வடிவத்துடனும் ராணுவப் பயன்பாட்டிற்கான 10 மீற்றர் வரை கண்காணிக்கவல்ல மற்றொரு வடிவத்துடனும் அது அமைக்கப்படும். அருகே உள்ள பொருட்களையோ, நெருங்கிவரும் ஆபத்தையோ கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்ல, நேர மேலாண்மை, பேரிடர் தடுப்பு, கப்பல், விமானம் போன்ற போக்குவரத்து சாதனங்களை நிர்வகிப்பது, வரைபடங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளுக்கு IRNSS அமைப்பைப் பயன்படுத்த முடியும். 

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்த அமைப்பைக் கையாளக் கூடிய ஆறாவது நாடாக இந்தியா இருக்கும் என்பதில் நிச்சயம் பெருமிதம் அடையலாம். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger